தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ‘ரூ. 8,000 இல்லத்தரசி கூப்பன்’ திட்டத்தின் மாதிரி கூப்பன்களை வாக்காளர்களுக்கு விநியோகிக்கத் தேர்தல் ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. மீறி கூப்பன்களை வழங்கினால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு வீட்டுத் தேவைகளை வாங்குவதற்காக ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்தத் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க, காசோலை புத்தகம் வடிவில் மாதிரி கூப்பன்களை அச்சிட்டு திமுகவினர் வீடு வீடாக விநியோகித்து வந்தனர்.
ஒரு பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்துடன் ‘உதயசூரியன்’ சின்னமும், மறுபக்கத்தில் ‘உங்கள் குடும்பம், உங்கள் தேவையை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தன.
மாதிரி கூப்பன்களை வழங்குவது வாக்காளர்களைக் கவர்ந்து இழுக்கும் மறைமுக முயற்சியாகும் என்றும், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன.
இந்தப் புகாரை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, ரூ. 8,000 இல்லத்தரசி கூப்பன் திட்டம் குறித்துத் துண்டுப் பிரசுரங்கள் வாயிலாக விளம்பரம் செய்யத் தடையில்லை. ஆனால், நிஜமான கூப்பன் போன்ற தோற்றமளிக்கும் மாதிரி கூப்பன்களை (Model Coupons) மக்களுக்கு வழங்கக் கூடாது.
தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் அச்சிடப்பட்ட இத்தகைய கூப்பன்கள் கண்டறியப்பட்டால் அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும்.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், திமுகவின் இந்த முக்கிய வாக்குறுதிக்குத் தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை போட்டுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இது ஒரு முக்கியமான வெற்றி என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
