Home Politics மிரளவிட்ட 2026 தேர்தல்: 84.69% வாக்குப்பதிவுடன் புதிய வரலாறு! ஆண்களை முந்திய பெண்கள்!

மிரளவிட்ட 2026 தேர்தல்: 84.69% வாக்குப்பதிவுடன் புதிய வரலாறு! ஆண்களை முந்திய பெண்கள்!

0

சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் பதிவான அதிகபட்ச வாக்குகள்; 2021 சாதனையை முறியடித்து 4.83 கோடி மக்கள் வாக்களிப்பு; கரூர் மாவட்டம் 91.78 சதவீதத்துடன் முதலிடம்.

தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டு கால விதியைத் தீர்மானிக்கப்போகும் ‘மகா தேர்தல்’ திருவிழா, இன்று அதிரடியான புதிய வரலாற்றுச் சாதனைகளுடன் நிறைவடைந்தது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத வகையில், மாநிலம் முழுவதும் சராசரியாக 84.69 சதவீத வாக்குகள் பதிவாகிப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டுத் தேர்தலை விட இந்த முறை சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாகத் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.73 கோடியாக உள்ள நிலையில், இன்று நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவில் மொத்தம் 4.83 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதமான 73.63%-ஐ விட மிக அதிகமாகும். இந்த அதீத எழுச்சி தமிழக அரசியலில் ஒரு பெரிய ‘கேம் சேஞ்சர்’ மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஆண்களை விடப் பெண் வாக்காளர்களே அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். பெண்கள் 85.76% வாக்குகள் பதிவு செய்துள்ள நிலையில், ஆண்கள் 83.57% வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் களத்தின் முக்கியப் புள்ளிவிவரங்கள்:

மொத்தத் தொகுதிகள்: 234

மொத்த வேட்பாளர்கள்: 4,023 பேர்

வாக்குச்சாவடிகள்: 75,064

வாக்குப்பதிவு செய்தோர்: 4.83 கோடி

தேர்தல் பணியாளர்கள்: 3.75 லட்சம் பேர்

வாக்குப்பதிவில் கலக்கிய ‘டாப் 5’ மாவட்டங்கள்:

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் வழக்கம் போல வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாகக் கரூர் மாவட்டம் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 91.78% வாக்குப்பதிவைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சேலம் (90.09%), தருமபுரி (89.77%), ஈரோடு (89.67%) மற்றும் நாமக்கல் (89.39%) ஆகிய மாவட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளன.

அதேநேரம், கன்னியாகுமரி (75.35%), சிவகங்கை (76.01%) போன்ற மாவட்டங்களில் வாக்குப்பதிவு மாநில சராசரியை விடக் குறைவாகவே இருந்துள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM) சீல் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ளன.

NO COMMENTS

Exit mobile version