“கியர் வண்டி ஓட்டத் தெரியாது!” – சிலேட்டு குச்சியால் 61 வயது திருடன் சிக்கியது எப்படி?

0
1

கியர் வைத்த வண்டிகளைத் தொடக்கூடத் தெரியாத ஒரு முதியவர், கடந்த 15 ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட ஸ்கூட்டிகளைத் திருடித் தள்ளிய விநோதச் சம்பவம் தாம்பரத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிலேட்டு குச்சியைப் பயன்படுத்தி லாக்கை உடைக்காமல் திருடும் இந்த ‘கில்லாடி’ திருடனைத் தாம்பரம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் சக்கரவர்த்தி என்பவர், தாம்பரம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தியிருந்த தனது ‘டியோ’ இருசக்கர வாகனம் திருடு போனதாகப் புகார் அளித்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான், ஒரு முதியவரின் கைவரிசை அம்பலமானது.

சிசிடிவி காட்சிகளில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர், வாகனத்தின் பூட்டை உடைக்காமல், கையில் ஏதோ ஒரு பொருளை வைத்து லாவகமாகத் திறந்து வண்டியை ஓட்டிச் செல்வது பதிவாகியிருந்தது. அந்த அடையாளங்களை வைத்துப் போலீசார் விசாரணை நடத்தியதில், பிடிபட்டவர் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகரன் (61) என்பது தெரியவந்தது.

ஹரிகரனைப் பிடிக்க போலீசார் முற்பட்டபோது அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டுத் தலைமறைவானார். இதற்கிடையே, தாம்பரம் பகுதியில் மேலும் 3 ஸ்கூட்டிகள் திருடு போனதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து, தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், தாம்பரம் பகுதியில் சுற்றித் திரிந்த ஹரிகரனை மடக்கிப் பிடித்தனர். போலீஸ் விசாரணையில் ஹரிகரன் வாக்குமூலமாகப் பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளார்:

15 வருடங்களுக்கு முன்பு சானிடோரியம் ரயில் நிலையத்தில் கடை நடத்தி வந்த ஹரிகரனுக்கு நஷ்டம் ஏற்பட்டதால், முதல் முறையாக ஒரு ஸ்கூட்டியைத் திருடி 2,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். அதுவே அவருக்குத் தொழிலாகிப் போனது.

ஹரிகரனுக்கு கியர் வைத்த வண்டிகளை ஓட்டத் தெரியாது. அதனாலேயே அவர் ஸ்கூட்டி மாடல் வாகனங்களை மட்டுமே குறிவைத்துத் திருடி வந்துள்ளார்.சிலேட்டு குச்சி வித்தை: வண்டியின் லாக்கை உடைத்தால், அதனைச் சரி செய்யப் பணம் செலவாகும் என்பதால், ஒரு சிறிய சிலேட்டு பின்னை (Slate Pin) வைத்தே லாக்கை மிக லாவகமாகத் திறந்து வண்டியைத் திருடியுள்ளார். திருடிய வண்டிகளை வெறும் 3,000 முதல் 5,000 ரூபாய்க்கு விற்று அந்தப் பணத்தில் தனது செலவுகளைக் கவனித்து வந்துள்ளார்.

ஏற்கனவே மறைமலைநகர், சிட்லபாக்கம், சேலையூர் எனப் பல காவல் நிலைய எல்லைகளில் கைதாகி சிறை சென்றுள்ள ஹரிகரன், கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். வந்த வேகத்திலேயே மீண்டும் தனது ‘ஸ்கூட்டி வேட்டையைத்’ தொடங்கியுள்ளார். இதுவரை 150-க்கும் மேற்பட்ட வாகனங்களைத் திருடியுள்ள இவரிடமிருந்து தற்போது 10 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வயதான காலத்தில் உழைத்து வாழ வழியில்லாமல், குறுக்கு வழியில் இறங்கிய ஹரிகரன் தற்போது மீண்டும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இருசக்கர வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தவும், கூடுதல் பூட்டு வசதிகளைச் செய்து கொள்ளவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 15 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த ‘ஸ்கூட்டி ராஜா’வின் கதை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.