தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கடப்பேரி பகுதியில் ரூ.20 கோடி மதிப்பில் நவீன கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டபோது, தாம்பரம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, செம்பாக்கம், சிட்லப்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை மற்றும் மாடம்பாக்கம் உள்ளிட்ட 10 உள்ளாட்சிகள் இணைக்கப்பட்டன. இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வசித்து வரும் நிலையில், தரமான விளையாட்டு மைதான வசதிகள் இல்லாதது நீண்டநாள் குறையாக இருந்து வந்தது.
தற்போது இரும்புலியூர் டிடிகே நகரில் சிறிய அளவிலான மைதானம் இருந்தாலும், கிரிக்கெட் போட்டிகள் நடத்த போதிய வசதிகள் இல்லை என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, சென்னை புறவழிச்சாலையை ஒட்டிய கடப்பேரி பகுதியில் உள்ள 8 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பள்ளமாக இருந்த அந்த இடம் மண் கொட்டி சமப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு நவீன வசதிகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ.20 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கையை தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.





