Home செங்கல்பட்டு நடிகை தமன்னாவின் ரூ.1 கோடி இழப்பீடு மனு தள்ளுபடி! – உயர் நீதிமன்றம் அதிரடி!

நடிகை தமன்னாவின் ரூ.1 கோடி இழப்பீடு மனு தள்ளுபடி! – உயர் நீதிமன்றம் அதிரடி!

0

புதுச்சேரியைச் சேர்ந்த ‘பவர் சோப்ஸ்’ (Power Soaps) நிறுவனத்திடமிருந்து ரூ. 1 கோடி நஷ்டஈடு கோரி நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் தனது புகைப்படத்தைப் பயன்படுத்தியதாகத் தமன்னா முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டு பவர் சோப் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்க நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது.

ஒப்பந்தம் முடிந்த பின்னரும், சோப்பு உறைகள் மற்றும் இதர விளம்பரப் பொருட்களில் தனது புகைப்படங்களை அந்த நிறுவனம் தொடர்ந்து சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவதாகத் தமன்னா குற்றம் சாட்டினார்.
இதற்காக ரூ. 1 கோடி நஷ்டஈடு மற்றும் தனது படங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி 2011-ஆம் ஆண்டு அவர் நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தனிநீதிபதி, தமன்னா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்கள் நம்பகத்தன்மையற்றவை எனக் கூறி, கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்கை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து தமன்னா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே. கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மேல்முறையீட்டு மனு நேற்று (ஏப்ரல் 16, வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனிநீதிபதி அளித்த தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதினர். தமன்னா தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் போதிய முகாந்திரம் இல்லை என்பதைக் கோடிட்டுக் காட்டிய நீதிபதிகள், தமன்னாவின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் சுமார் 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தச் சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version