தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் சிறப்பு பயிற்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தாட்கோ மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry Course) மற்றும் சிகை அலங்காuம் (Diploma in Creative Hair Dressing & Chemical Treatment Courses) போன்ற தொழில்முறை திறன் பயிற்சிகளை வழங்க உள்ளன.
இந்த பயிற்சிகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என தகுதி நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
45 நாட்கள் கால அளவிலான இந்த பயிற்சி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்க தகுதி பெறும் நபர்களுக்கான தங்குமிடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகள் அனைத்தும் தாட்கோ மூலம் ஏற்கப்படும்.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு, பயிற்சி வழங்கும் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆரம்ப கட்ட மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேர விரும்புவோர், தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com -ல் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பை நோக்கி பயணிக்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.