மேற்காசியப் போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் இன்று தீவிர வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஸ்விக்கி, ஜொமேட்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களின் இந்தத் திடீர் போராட்டத்தால் ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோகம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்காசியப் பகுதியில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி எதிரொலியாக, இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வு சாமானியர்களை மட்டுமின்றி, இருசக்கர வாகனங்களை மட்டுமே நம்பிப் பிழைப்பு நடத்தும் ஆன்லைன் டெலிவரி ஊழியர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது.
இந்த விலை உயர்வைக் கண்டித்தும், தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஸ்விக்கி (Swiggy), ஜொமேட்டோ (Zomato), பிளிங்கிட் (Blinkit), செப்டோ (Zepto) உள்ளிட்ட முன்னணி ஆன்லைன் நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள் இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். “கடும் மழை, புயல், சுட்டெரிக்கும் வெயில், பனி என எந்தக் கடுமையான காலநிலையிலும் மக்களின் இருப்பிடத்திற்கே தேடிச் சென்று உணவு மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை டெலிவரி செய்து வருகிறோம். எங்கள் பிழைப்பே டூ-வீலர்களை நம்பிப் போய்க்கொண்டிருக்கும் வேளையில், இந்த பெட்ரோல் விலை உயர்வு எங்களின் தினசரி வருமானத்தை அப்படியே பறித்துவிடும் மாபெரும் சுமையாக மாறியுள்ளது” என்று ஊழியர்கள் தங்களின் வேதனையைக் கொட்டியுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் இந்த அதிரடி விலை உயர்வை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், டெலிவரி நிறுவனங்கள் தங்களின் மைலேஜ் கட்டணங்களை உயர்த்திக் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதிய உணவு நேரத்தில் தொடங்கியுள்ள இந்த 5 மணி நேர ஸ்டிரைக் காரணமாக, நகர்ப்புறங்களில் ஆன்லைன் ஆர்டர்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
