பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சுட்டுக்கொலை!

0
3

மேற்கு வங்க மாநில பாஜக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் (PA) மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தின் மத்தியகிராம் (Madhyagram) என்ற இடத்தில் இன்று காலை இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளரான சுந்திரா என்பவர், மர்ம நபர் ஒருவரால் மிக அருகாமையில் வைத்துத் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட படுகொலை என பாஜக தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே இது காட்டுவதாக அக்கட்சித் தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் இந்தக் கொலைச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இருப்பினும், இதற்கும் தங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

முக்கியத் தலைவரின் உதவியாளர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான பரபரப்பு நிலவி வரும் வேளையில், தேசிய அளவில் மேற்கு வங்கத்தில் நடந்துள்ள இந்தப் படுகொலை சம்பவம் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.