விஜய் பதவியேற்பு விழா: ஸ்டாலின், இபிஎஸ் புறக்கணிப்பு! திமுக, அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு!

0
2

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்கும் பிரம்மாண்ட விழாவில், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் நேரில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை.

முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விழாவிற்கு வரவில்லை. தேர்தல் களத்தில் ஏற்பட்ட கடும் போட்டி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் காரணமாக இவர்கள் நேரில் வருவதைத் தவிர்த்திருக்கலாமெனக் கருதப்படுகிறது.

தலைவர்கள் வராத போதிலும், திராவிடக் கட்சிகள் சார்பில் அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்டு புதிய முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அக்கட்சியின் சார்பிலும் சில முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னாள் முதல்வர்கள் வராத அதே வேளையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட விஜய்யின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மேடையில் அமர்ந்து விழாவிற்குச் சிறப்பூட்டினர்.

தமிழக அரசியல் வரலாற்றில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், திராவிடக் கட்சிகளின் இந்த ‘நிர்வாகிகள் மட்டும்’ பங்கேற்பு என்பது ஒருவித அரசியல் சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. எது எப்படியிருப்பினும், “ஜோசப் விஜய் எனும் நான்…” என முழக்கமிட்டு விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றபோது அரங்கம் அதிர்ந்தது.