தென் கொரியா நாட்டில் பௌத்த மத வரலாற்றில் புதிய முயற்சியாக மனித உருவ ரோபோ ஒன்றுக்கு அதிகாரப்பூர்வமாக பௌத்த துறவி தீட்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு Jogyesa Temple ஆலயத்தில் புத்தர் பிறந்தநாளான Vesak தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.
சுமார் 130 சென்டிமீட்டர் உயரமுள்ள இந்த மனித உருவ ரோபோவிற்கு “காபி” (Gabbi) என பெயரிடப்பட்டுள்ளது. கொரிய மொழியில் “காபி” என்பது கருணை என்ற அர்த்தத்தை குறிக்கிறது. சீனாவின் யுனிட்ரீ ரோபோட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த G1 வகை ரோபோவான இதன் மதிப்பு சுமார் 13,500 அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மனித துறவிகளுக்கு வழங்கப்படும் தீட்சை சடங்குகளில் சில மாற்றங்களுடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. ரோபோவின் கையில் பாரம்பரிய சூடு சடங்கிற்கு பதிலாக தாமரை விளக்கு விழா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் அதன் கழுத்தில் 108 மணிகள் கொண்ட ஜெபமாலை அணிவிக்கப்பட்டது.
இளைஞர்களிடையே பௌத்த மத ஈடுபாடு குறைந்து வருவதால், தொழில்நுட்பத்தின் மூலம் புதிய தலைமுறையை ஈர்க்கும் முயற்சியாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. இந்த ரோபோவுக்காக உயிர்களை காப்பது, மனிதர்களை மதிப்பது, ஏமாற்றங்களை தவிர்ப்பது உள்ளிட்ட ஐந்து நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டன. இவற்றை வடிவமைப்பதில் சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் உதவி பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
