செங்கல்பட்டு: வெடிக்காத குண்டுகள் மீட்பு – ராணுவம் தீவிர சோதனை

0
3

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள அனுமந்தபுரம் வனப்பகுதியில், ராக்கெட் லாஞ்சர் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு வெடிக்காமல் சிதறிக் கிடந்த பல்வேறு வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.

இந்த வனப்பகுதியில் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படை வீரர்களுக்கு துப்பாக்கி சுடுதல் மற்றும் ராக்கெட் லாஞ்சர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சிகளின் போது சில குண்டுகள் வெடிக்காமல் சுற்றுப்புற பகுதிகளில் சிதறி விழும் நிலை ஏற்படுகிறது.

கடந்த 14ஆம் தேதி, மறைமலைநகர் அருகே உள்ள பொத்தேரி பகுதியில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அனுமதியின்றி மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, அங்கு கிடந்த வெடிபொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் ஒரு மாணவர் உயிரிழந்தார், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த விபரீதத்துக்குப் பின்னர், தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர். இதையடுத்து, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, அந்த பகுதியில் சிதறிக் கிடக்கும் வெடிபொருட்களை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டது.

அதன் பேரில், ராணுவ போலீசார் பல குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக வெடிக்க வைத்து அகற்றப்பட்டன. தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் மேலும் சில வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.