Home செங்கல்பட்டு சிலாவட்டம் ஊராட்சி: 15வது நிதிக்குழு நிதியில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்

சிலாவட்டம் ஊராட்சி: 15வது நிதிக்குழு நிதியில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்

0

மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் ஊராட்சியில், 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் பல்வேறு அடிப்படை வசதி மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் மூலம் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சிலாவட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கோழிப்பண்ணை தெருவில் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளி பின்புற சாலையில் ரூ.1.45 லட்சம் செலவில் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், அய்யனார் கோவில் அருகிலுள்ள கண்ணதாசன் நகர் பகுதியில் குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாவட்ட கவுன்சிலர் நிதியின் மூலம் சிலாவட்டம் சுடுகாடு செல்லும் பாதையில் ரூ.10 லட்சம் செலவில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.86 ஆயிரம் மதிப்பீட்டில் நர்சரி செடிகள் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புற சாலைகள் சீரமைத்தல், புதிய சிமென்ட் சாலைகள் அமைத்தல், குடிநீர் வசதிகள் விரிவாக்கம் போன்ற அடிப்படை பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும், பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மழைக்காலங்களில் மக்கள் சந்திக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் இந்த பணிகள் உதவும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டங்களின் மூலம் கிராம மக்கள் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறி வருவதாகவும், எதிர்காலத்திலும் மக்கள் தேவைகளை கருத்தில் கொண்டு கூடுதல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version