குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பார்டோலி அருகே தேசிய நெடுஞ்சாலை 53-இல், இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநில அரசுப் போக்குவரத்து கழகத்திற்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் இன்று சூரத் – துலே தேசிய நெடுஞ்சாலையில் பார்டோலி அடுத்த உவா கிராமம் அருகே வந்துகொண்டிருந்தன. அப்போது, சாலையில் எதிர்பாராத விதமாகப் பழுதடைந்து கவிழ்ந்து கிடந்த ஒரு சரக்கு டேங்கர் லாரி மீது மோதாமல் இருக்க, ஒரு பேருந்தின் ஓட்டுநர் வாகனத்தைத் திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, சாலை நடுவே இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு எதிர்த்திசையில் பாய்ந்து, வந்த மற்றொரு அரசுப் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த மோதலின் காரணமாக, ஒரு பேருந்து நடுரோட்டிலேயே தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்தது. விபத்துக்குள்ளான பேருந்துகளில் ஒன்று சிஎன்ஜி (CNG) எரிபொருளில் இயங்கக்கூடியது என்பதால், மோதிய அடுத்த சில விநாடிகளிலேயே பேருந்தில் பயங்கர வெடிச்சத்தத்துடன் பெருந்தீப்பற்றிக் கொண்டது. பேருந்து முழுவதும் தீ வேகமாகப் பரவியதால், உள்ளே இருந்த பயணிகள் பலரால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது. இந்த கோரத் தீ விபத்தில் சிக்கி 7 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சூரத் மற்றும் தாபி மாவட்ட தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் ஆம்புலன்ஸ்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உள்ளூர் மக்களின் உதவியோடு மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பின் பேருந்தின் தீ அணைக்கப்பட்டு, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகப் பார்டோலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்துப் பார்டோலி ஊரகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர விபத்தால் குஜராத் – மகாராஷ்டிரா தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
