தேர்தலுக்கு முன்பு கரூருக்கு வந்து வண்டியின் மீது ஏறி நின்று, டாஸ்மாக் விவகாரத்தில் அவதூறு பரப்பிப் பாட்டெல்லாம் பாடினார்களே… இன்று எதைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள்? அன்று பாடிய பாட்டுக்கு இன்று என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?” என்று திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தவெக அரசுக்குக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், அவர் செய்தியாளர்களிடம் அனல் பறக்கப் பேசினார்.
அப்போது தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய அவர், திரையிலும் திரைப்படத்திலும் வசனங்கள் பேசுவது எளிது என்றும், ஆனால் அரசுப் பொறுப்பை ஏற்ற பிறகு மக்களின் அவசரத் தேவைகளை உணர்ந்து செயல்படுவதுதான் ஒரு முதலமைச்சரின் கடமை என்றும் குறிப்பிட்டார். எங்களுடைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுப் பொறுப்பேற்பதற்கு முன்பே, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்தார் என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசோ திமுகவை விமர்சிப்பதை மட்டுமே தங்களின் ஒரே குறியாகக் கொண்டுள்ளது என்றும், அரசாங்கத்தை இவர்கள் ஒழுங்காக நடத்துவார்களா என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டார்கள் என்றும் தெரிவித்தார். மாற்றம் என்று கூறி, வெற்று கவர்ச்சியான பேச்சுகளால் மக்களிடம் ஓட்டுகளை வாங்கி ஏமாற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டிய செந்தில் பாலாஜி, கல்வி மற்றும் மருத்துவத்தில் தமிழ்நாடு ஏற்கனவே இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள நிலையில் இவர்கள் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், மகளிருக்கு பாதுகாப்புப் படை அமைப்போம் என்று கூறிவிட்டு, தற்பொழுது மூன்று முறை அதைத் தள்ளிப் போட்டுள்ளதாகவும், சூலூரில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு சம்பவமே இதற்குச் சான்று என்றும் விவரித்தார். திமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கிக் கொடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்பொழுது பல இடங்களில் மின்சாரப் பற்றாக்குறையால் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகக் கவலை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “விளையாட்டுத்துறை அமைச்சர், எங்கள் கழகத் தலைவர் துவக்கி வைத்த திட்டங்களையே புதியது போல அறிவித்துக் கொண்டிருக்கிறார். தொழில்துறை அமைச்சர் ‘ரீல்ஸ்’ போடுவதை விடுத்து, அதன் மூலம் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்துள்ளார், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இது ஒரு ‘ரீல்ஸ் ஆட்சி’. இன்னும் ஒரு மாத காலம் இந்த ஆட்சியை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்தார். இறுதியாக, அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்கு, அப்படி ஒரு தகவல் எனக்குத் தெரியவில்லை, அவ்வாறு ஆரம்பித்தால் அதைப் பற்றி அப்போது பேசுவோம் என்று சுருக்கமாகப் பதிலளித்தார்.
