“2-ஆம் கட்ட அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்!”: செல்வப்பெருந்தகை அதிரடிப் பேட்டி!

0
3

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, புதிய அமைச்சரவையில் காங்கிரஸின் பங்களிப்பு குறித்து முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இன்று நடைபெற்ற முதற்கட்ட அமைச்சரவை பதவியேற்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை கூறியதாவது, இரண்டாம் கட்ட அமைச்சரவைப் பட்டியலில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக இடம்பெறும். அதனை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். எந்தெந்தத் துறைகளைக் காங்கிரஸ் பெறும் என்பது குறித்து ஆலோசனைகள் நடத்திப் பின்னர் அறிவிக்கப்படும். தவெக-வுடனான காங்கிரஸின் கூட்டணி தற்காலிகமானது அல்ல. வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் இந்த வெற்றிக் கூட்டணி தொடரும்.

திமுக கூட்டணியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதரவு அளித்த விவகாரம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்தார்: நாங்கள் திமுக-விடம் சொல்லாமல் வரவில்லை. எங்கள் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அவர்கள், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் மகளிர் அணித் தலைவி கனிமொழி ஆகியோரிடம் விரிவாகப் பேசியுள்ளார். அதன் பிறகுதான் இந்த முடிவை எடுத்தோம்.”

நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்ற வேண்டும் என்பது திமுக-வின் விருப்பம். அதில் நாங்கள் தலையிட முடியாது. முதலமைச்சர் விஜய்யின் முதல் உரையை வரவேற்ற செல்வப்பெருந்தகை, “கொடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் விஜய் தெளிவாகக் கூறியுள்ளார். அவர் இன்றுதான் பொறுப்பேற்றுள்ளார், எனவே அனைவரும் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருந்து பார்க்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார். மேலும், ராகுல் காந்தி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தத் தங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விஜய்யின் அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப்போவது உறுதி எனச் செல்வப்பெருந்தகை அறிவித்திருப்பது, தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சிக்கான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.