Home செங்கல்பட்டு மின்வாரிய ஹார்ட் டிஸ்க் மாயம்: யாரைக் காப்பாற்ற முயற்சி? – சவுக்கு சங்கர் கேள்வி

மின்வாரிய ஹார்ட் டிஸ்க் மாயம்: யாரைக் காப்பாற்ற முயற்சி? – சவுக்கு சங்கர் கேள்வி

0

மின்வாரியத் துறையில் சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போனதாக கூறப்படும் விவகாரம் குறித்து சவுக்கு சங்கர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதேசமயம், சவுக்கு மீடியாவில் பணியாற்றும் மாலதி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சி சூர்யா மீது சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

சவுக்கு மீடியாவில் பணியாற்றி வரும் மாலதி, சென்னை விமான நிலைய வளாகத்தில் செயல்படும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், திருச்சியைச் சேர்ந்த திருச்சி சூர்யா சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக சித்தரித்து பதிவுகள் வெளியிட்டு வருவதாகவும், தனக்கு நோய் இருப்பதாக தவறான தகவல்களை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இத்தகைய பதிவுகள் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக மரியாதையை பாதித்துள்ளதாகவும், இதனால் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் கூட தயக்கத்துடன் அணுகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கோரியுள்ளார்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர், மின்வாரியத் துறையில் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போன விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பேசப்படும் நிலையில், துறை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் இதுகுறித்து தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், காணாமல் போன ஹார்ட் டிஸ்க்களில் முக்கிய தகவல்கள் இருக்கக்கூடும் என்றும், அவை வெளியே வராமல் தடுக்கவே மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வரக்கூடும் என்பதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version