பொத்தேரியில் ரயில் மோதி கர்ப்பிணியும், அவரது ஆண் நண்பரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (28). கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷரீப் (35). இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவரும் கேரளாவில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில், கூடுவாஞ்சேரி அருகே உள்ள தனது நண்பர் வீட்டுக்குச் செல்ல, ரயில் தண்டவாளத்தில் பேசியபடி நடந்து சென்றுள்ளனர். அச்சமயம் அவ்வழியாக வந்த சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயிலில் அடிபட்டு, இருவருக்கும் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து நடந்த சில நிமிடங்களில், முகமது ஷரீஃப் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை அருகில் இருந்த, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஐஸ்வர்யா நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடூர விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் தற்செயலாக செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டதா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
