Home Trending/Viral 43 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுப் பயணம்! நார்வேயில் 5 நார்டிக் நாட்டு பிரதமர்களுடன் மோடி உச்சி...

43 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுப் பயணம்! நார்வேயில் 5 நார்டிக் நாட்டு பிரதமர்களுடன் மோடி உச்சி மாநாடு!

0

அரசு முறைப் பயணமாக நார்வே நாட்டுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுத் தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற 3-ஆவது ‘இந்தியா – நார்டிக்’ (India-Nordic) உச்சி மாநாட்டில் நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய 5 நார்டிக் நாடுகளின் பிரதமர்களை நேரில் சந்தித்துப் பேசி சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஓஸ்லோ, மே 19: ஐந்து நாடுகள் அடங்கிய ஐரோப்பியப் பயணத்தின் ஒரு பகுதியாகச் ஸ்வீடனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று நார்வே நாட்டுக்கு வந்தடைந்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, ஓஸ்லோவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது மாநாட்டின் பக்கவாட்டில், நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ, ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டாடாட்டிர் மற்றும் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகிய 5 நாடுகளின் உலகத் தலைவர்களையும் பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் 1.9 டிரில்லியன் டாலர் கூட்டுப் பொருளாதார மதிப்பு கொண்ட இந்த நார்டிக் நாடுகளுடனான இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில், சர்வதேச வர்த்தகம், பசுமை எரிசக்தி (Green Energy), கடல்சார் பொருளாதாரம் (Blue Economy) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை வலுப்படுத்துவது குறித்து மிக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாகப் பின்லாந்துடன் 5G, 6G மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் குறித்தும், ஐஸ்லாந்துடன் கார்பன் மேலாண்மை குறித்தும் மோடி ஆலோசித்தார். கடந்த 1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 43 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் ஒருவர் நார்வே நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதால், மோடியின் இந்த மெகா நார்டிக் ராஜதந்திர நகர்வு உலக அரங்கில் இந்தியாவின் பொருளாதார ஆதிக்கத்தை உயர்த்தும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version