செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநீர்மலை கிழக்கு மாட வீதியைச் சேர்ந்த மாரி (46) என்பவர் அப்பகுதியில் தோட்ட வேலை செய்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மாணவியிடம் பேச்சுக் கொடுத்து, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் மாரியை கைது செய்தனர்.
பின்னர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
