திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் மாங்காய் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ மாங்காய் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது சந்தைக்கு அதிகளவில் மாங்காய் வரத்து ஏற்பட்டுள்ளதால், ஒரு கிலோ மாங்காய் ரூ.5 முதல் ரூ.6 வரை மட்டுமே மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் அதிகபட்சமாக ரூ.30 வரை விற்பனையான மாங்காய் தற்போது வெறும் ரூ.5-க்கு விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்ததால் ஒட்டன்சத்திரம், நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, பழநி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுடன் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் மாங்காய் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரே நேரத்தில் டன் கணக்கில் மாங்காய்கள் சந்தையில் குவிந்துள்ளன. வரத்து அதிகரித்த நிலையில், தேவை குறைந்ததால் விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய விலையில் மாங்காய் விற்பனை செய்வதால், பழங்களை பறிக்கும் கூலி, போக்குவரத்து செலவு மற்றும் பராமரிப்பு செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டும் மாங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால் சில விவசாயிகள் மாமரங்களை வெட்டி அகற்றிய சம்பவங்கள் நடந்திருந்தன.
எனவே, மாங்காய் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
