விமானக் கட்டணத்தை மிஞ்சும் ஆம்னி பேருந்து வசூல்! வாக்காளர்கள் கடும் அதிர்ச்சி!

0
5

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றச் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள், கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்திப் பகற்கொள்ளையில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர்களின் அவசரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, குறிப்பாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் கட்டணம் விமானக் கட்டணத்திற்கு இணையான விலையில் விற்கப்படுகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரூ. 3,500 முதல் ரூ. 4,000 வரையிலும், திருநெல்வேலிக்கு ரூ. 3,000 முதல் ரூ. 3,600 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், கோவைக்கு ரூ. 3,200 வரையிலும், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல ரூ. 3,000 வரையிலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகப் பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பண்டிகைக் காலங்களைப் போலவே தேர்தல் நேரத்திலும் ஆம்னி பேருந்துகள் தன்னிச்சையாக இத்தகைய கட்டண உயர்வைக் கையாளுவது வாக்காளர்களை முடக்கும் செயல் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் ஊருக்குச் செல்வதாக இருந்தால், பயணத்திற்கு மட்டுமே பல்லாயிரக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளதாகப் பயணிகள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.

எனவே, போர்க்கால அடிப்படையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனைகளைத் தீவிரப்படுத்தி, விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளைப் பறிமுதல் செய்து, அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.