Home Politics “அனுமதி இல்லை, பதாகையை எடுங்கள்!” – சீமான் பிரச்சாரத்தில் போலீசாருடன் நாதகவினர் வாக்குவாதம்!

“அனுமதி இல்லை, பதாகையை எடுங்கள்!” – சீமான் பிரச்சாரத்தில் போலீசாருடன் நாதகவினர் வாக்குவாதம்!

0

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, பதாகை (Banner) வைப்பது தொடர்பாகக் காவல்துறைக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திச் சீமான் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அமுதா என்பவரை ஆதரித்து, செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு பகுதியில் இன்று பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்திற்காக, தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன், சீமான் மற்றும் வேட்பாளர் படங்கள் அடங்கிய பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதற்காக முறையாக அனுமதி கோரி மனு அளித்தும், தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்தப் பகுதியில் பதாகை வைக்கப்பட்டிருந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பதாகையைச் சீமான் வருவதற்கு முன்பாகவே அகற்ற வேண்டும் எனத் தேர்தல் பறக்கும் படை (Flying Squad) அதிகாரிகள் மற்றும் செங்கல்பட்டு நகரக் காவல்துறையினர் வலியுறுத்தினர். இதற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்:

முறையாக மனு கொடுத்தும் நீங்கள் அனுமதி வழங்கவில்லை. பிரச்சாரம் முடிந்த அடுத்த நிமிடம் நாங்களே பதாகையை அகற்றிவிடுகிறோம். அதுவரை அகற்ற முடியாது,” என உறுதியாகத் தெரிவித்தனர். அனுமதி இன்றி பதாகை வைப்பது தேர்தல் விதிமுறை மீறல் என அதிகாரிகள் எச்சரித்ததால் இரு தரப்பினரிடையே நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் நீடித்தது.

காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி, நாம் தமிழர் கட்சியினர் பதாகையை அகற்ற மறுத்துவிட்டனர். பெரும் பரபரப்பிற்கு மத்தியில் சீமான் பிரச்சார மேடைக்கு வந்து உரையாற்றினார். தேர்தல் நேரத்தில் காவல்துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல் செங்கல்பட்டு பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

NO COMMENTS

Exit mobile version