முறைகேடு: மே 3ல் நடந்த NEET தேர்வு ரத்து – 23 லட்சம் பேர் அப்சட்

0
1

தேசிய தேர்வு முகமை (NTA) மே 3ஆம் தேதி நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளால் சர்ச்சையில் சிக்கியிருந்தது. இதனால், இந்தியாவில் முதன்முறையாக நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக தகவல்கள் வெளியாகின. தேர்வுக்கு முன்பே கேள்வித்தாள்கள் பரவியதாகவும், பல இடங்களில் அமைப்புசார்ந்த முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சூழலில் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மே 3 நடைபெற்ற தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனால் அந்தத் தேர்வை செல்லுபடியாக ஏற்க முடியாது என அறிவித்து, தேர்வை முழுமையாக ரத்து செய்துள்ளது.

மேலும், நீட் மறுதேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், மாணவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் NTA தெரிவித்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட பதிவு எண்களே மறுதேர்விலும் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை மூலம் வினாத்தாள் கசிவில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் காரணமாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயல்முறை தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் மற்றும் மருத்துவ கல்வி சேர்க்கை அட்டவணை மீது இதனால் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.