Home செங்கல்பட்டு 20 ஆண்டுகளாக சேதமடைந்த சாலை: நெடுமரம் பெரிய காலனி மக்கள் சீரமைப்பு கோரிக்கை

20 ஆண்டுகளாக சேதமடைந்த சாலை: நெடுமரம் பெரிய காலனி மக்கள் சீரமைப்பு கோரிக்கை

0

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அருகிலுள்ள நெடுமரம் ஊராட்சியில் சேதமடைந்த தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால், சாலைகளை உடனடியாக சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுமரம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்சேரி, சத்தியமங்கலம், மல்ராஜ்குப்பம் மற்றும் பெரிய காலனி உள்ளிட்ட பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குறிப்பாக பெரிய காலனி பகுதியில் மட்டும் ஏழுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால் மக்கள் தொடர்ந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை தற்போது முழுமையாக சேதமடைந்துள்ளது. சாலையின் மேற்பரப்பில் இருந்த ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போனதால், சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அதேபோல், பெரிய காலனி பகுதியில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையும் பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மழைக்காலங்களில் இந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சேதமடைந்த சாலைகள் காரணமாக ஆம்புலன்ஸ், அவசர சேவை வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் கூட சிரமத்துடன் இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, நெடுமரம் ஊராட்சியில் சேதமடைந்த தார் மற்றும் சிமெண்ட் சாலைகளை விரைவாக சீரமைத்து, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version