“தறுதலைகளா… தற்குறிகளா?” – கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் ஜேம்ஸ் வசந்தன் ஆவேசம்!

0
1

பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். உணவகத்திற்கு வெளியே தனது காரை நிறுத்திவிட்டுச் சென்ற அவர், சாப்பிட்டு முடித்துவிட்டுத் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர், “இது தறுதலைகள் செய்த காரியமா? அல்லது தற்குறிகள் செய்ததா? என்று தெரியவில்லை” என மிகவும் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தனின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டு விதமான அலைகளை உருவாக்கியுள்ளது. சமீபகாலமாகத் தமிழக அரசியல் மற்றும் நடிகர் விஜய் குறித்து ஜேம்ஸ் வசந்தன் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் அல்லது அவரது கட்சியினர் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவர் சொல்லும் கருத்துகளுக்குப் பதில் சொல்ல முடியாதவர்கள், இப்படி வன்முறையில் இறங்கியுள்ளனர்” என அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். கார் கண்ணாடி உடைப்பு குறித்து ஜேம்ஸ் வசந்தன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் மீண்டும் ஒரு பதிவில், “கார் கண்ணாடி உடைக்கப்பட்டது சிறிய விஷயமாகத் தோன்றினாலும், இது போன்ற அறமற்ற செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. கட்சிப் பாகுபாடின்றி எனக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், சென்னையில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.