பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டர்: அப்பளமான ஆட்டோ

0
6

தாம்பரம் அருகே முடிச்சூர் சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில், ஆட்டோ டிரைவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முடிச்சூர் சாலை கிருஷ்ணா நகர் பகுதியில், ஆட்டோ டிரைவரான வினோத்குமார் (40) தனது ஆட்டோவை சாலையோரமாக நிறுத்திவிட்டு அதற்குள் அமர்ந்திருந்தார். அப்போது தாம்பரம் நோக்கி காரை ஓட்டி வந்த நான்சி என்ற பெண், சாலையில் வலதுபுறமாக திரும்ப முயன்றதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில், பிரேக்குக்கு பதிலாக தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால், கார் திடீரென வேகமாக முன்னேறி கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையோரமாக நின்றிருந்த ஆட்டோ மீது கார் ஏறி மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த வினோத்குமார் பலத்த காயமடைந்தார். குறிப்பாக அவரது கையில் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.