அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி இடையே மோதல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பிறகு மாநிலங்களவை உறுப்பினர் தனபாலன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரு அணிகளாகப் பிரிந்து சபாநாயகரிடம் ஆதரவுக் கடிதம் அளித்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. தனபாலன், கட்சியின் ஒற்றுமை குறித்துப் பேசினார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தனபாலன், அதிமுகவில் எந்தச் சிக்கலும் குழப்பமும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். அவரைத் தவிர வேறு யாரும் அந்தப் பதவிக்கு வர வாய்ப்பே இல்லை. தொண்டர்கள் விரும்பும் ஒரே தலைவரும் அவர்தான். அவரைத் தவிர யாரையும் கட்சியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
கட்சிக்குள் சில உள்கட்சிப் பிரச்சினைகள் இருக்கலாம். அது விரைவில் சரியாகிவிடும். இது அதிமுக குடும்பத்திற்குள் இருக்கும் ஒரு சிறிய பிரச்சினைதான். அனைவரும் எங்களுடன்தான் இருக்கிறார்கள்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வேலுமணி தரப்பிற்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவளித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சட்டமன்ற விதிமுறைப்படி கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டும் என்பதால், குறைந்தபட்ச உறுப்பினர்கள் தேவை என்ற அடிப்படையில் அவர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர். மற்றபடி, அனைவரும் எடப்பாடியார் தலைமையின் கீழ்தான் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், “எங்களுக்குத் தோல்வி என்று சொல்ல முடியாது. இந்தத் தேர்தலில் அதிமுக கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. கட்சி வலுவாகவே உள்ளது” என்றார்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் வேலுமணி பக்கம் இருப்பதாகத் தகவல்கள் வெளிவரும் நிலையில், தனபாலனின் இந்தப் பேட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பின் பலத்தைக் காட்டும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.




