“தோல்விக்கு நானே பொறுப்பு!”: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வீடியோ பேச்சு!

0
2

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதன்முறையாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றின் வாயிலாகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றினார். இந்தத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவிற்குத் தான் ஒருவனே பொறுப்பேற்பதாக அறிவித்த அவர், கட்சியை மறுசீரமைப்பு செய்யப் பொதுமக்கள் மற்றும் உடன்பிறப்புகளிடம் இருந்து ஆலோசனைகளைக் கேட்டுள்ளார்.

“2026 தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போல அமையவில்லை. திமுக ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். வெற்றி கிடைக்கும்போது வரும் பாராட்டுகளை நான் ஏற்றுக்கொள்வது போல, இந்தத் தோல்விக்கும் தலைவனாக நானே பொறுப்பேற்கிறேன். இதற்கு யார் மீதும் பழி போடாதீர்கள்,” என ஸ்டாலின் உருக்கமாகத் தெரிவித்தார்.

கட்சியை அடுத்த 100 ஆண்டுகாலத்திற்குத் தயார்படுத்தவும், நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யவும் “குரல்” (Kural) என்ற பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கி உள்ளதாக அவர் அறிவித்தார்.

மக்கள் தங்களது கருத்துக்களை Voice Message வாயிலாகவோ, Type செய்தோ அல்லது கைப்பட எழுதிய காகிதத்தை Photo எடுத்து இணையதளத்தில் பதிவேற்றலாம்.

மக்களிடம் இருந்து வரும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே திமுக-வின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என அவர் உறுதி அளித்தார்.

“நமது அணுகுமுறை, சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் மாற்றம் தேவைப்படுகிறது. மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் ‘திமுக 2.0’ (DMK 2.0) உருவாக்கப்படும். கட்சியின் அனைத்து மட்டங்களிலும் தேவையான மாற்றங்கள் செய்யப்படும். காலத்திற்கு ஏற்ப நாம் நம்மை அப்டேட் (Update) செய்து கொள்வோம்,” என்று அவர் கூறினார்.

மக்களே எல்லாம் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “எலெக்ஷனாக இருந்தாலும் கலெக்ஷனாக இருந்தாலும் (கருத்துச் சேகரிப்பு) உங்களிடம் தான் வந்தாக வேண்டும். திமுக உங்களுக்காக எப்படி உழைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். உடன்பிறப்பே, நீங்க சொல்லுங்க… நான் கேட்கிறேன்,” எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த ‘பீட்பேக்’ (Feedback) அரசியல் நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.