இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இந்த விலை உயர்வு மிகவும் குறைவானதே என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேற்காசியப் போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்ட போதிலும், மத்திய அரசு அதனைத் திறம்படக் கையாண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்காசியாவில் நிலவும் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாகப் பல நாடுகளில் எரிபொருள் விலை 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த உயர்வு வெறும் 3.2% (பெட்ரோல்) மற்றும் 3.4% (டீசல்) என்ற அளவில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியது. அந்தச் சமயத்தில் மக்கள் மீது சுமையைத் திணிக்காமல் இருப்பதற்காக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பல வாரங்களாகப் பல கோடி ரூபாய் நஷ்டத்தைச் சுயமாக ஏற்றுக்கொண்டன. இதுவே பிரதமர் மோடி தலைமையிலான பொறுப்பான ஆட்சிக்குச் சிறந்த உதாரணம்,” என கிரண் ரிஜிஜு பாராட்டியுள்ளார்.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யவும் இந்தத் ‘சமச்சீரான’ (Balanced) விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். மற்ற நாடுகள் எரிபொருள் நெருக்கடியால் தவிக்கும் போது, இந்தியா தனது குடிமக்களைப் பாதுகாப்பதில் தனித்து நிற்பதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாகப் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்த எரிபொருள் விலை, தற்போது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த விளக்கம் மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது டெல்லியில் பெட்ரோல் ரூ. 97.77-க்கும், சென்னையில் ரூ. 103.67-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
