“டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று வேலை நிச்சயம்!”: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி உறுதி!

0
2

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், பணியிழக்கும் டாஸ்மாக் ஊழியர்களின் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள கவலைகளுக்குத் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பைப் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. முதலமைச்சர் விஜய்யைப் பொறுத்தவரை, வருவாயை விட மக்களின் உயிரும், ஆரோக்கியமும்தான் மிக முக்கியம். அதற்காகவே, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை மூட அவர் உத்தரவிட்டுள்ளார்,” என அமைச்சர் தெரிவித்தார்.

மூடப்படும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்துப் பேசிய அவர், “அரசு ஊழியர்களை முதலமைச்சர் ஒருபோதும் கைவிடமாட்டார். டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் எந்தவொரு ஊழியரும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடாது. அவர்களுக்குத் தகுதியான மாற்று வேலை வாய்ப்புகளை அரசு நிச்சயம் உறுதி செய்யும்,” என்று நம்பிக்கையளித்தார்.

பணியிழக்கும் ஊழியர்களைத் தமிழக அரசின் மற்ற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் அமர்த்துவது அல்லது இதர அரசு சார்ந்த நிறுவனங்களில் அவர்களுக்குப் பணி வழங்குவது குறித்து முதல்வர் ஏற்கனவே ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள்ளேயே டாஸ்மாக் நிர்வாகத்தில் இத்தகைய பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்வருக்கு இருக்கும் தீவிரத்தைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அமைச்சரின் இந்த அறிவிப்பு, அச்சத்தில் இருந்த டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.