காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயலும் திட்டத்தைக் கண்டித்து, மதிமுக சார்பில் தமிழகம் தழுவிய தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சிப் பிரமுகர் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்பான பேட்டி அளித்தார்.
“காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்தும், மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், ஜூன் 2-ஆம் தேதி சென்னையில் எனது தலைமையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாய அமைப்புகளின் பங்களிப்போடு பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, இதே கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜூன் 5-ஆம் தேதி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும்” என்று வைகோ அறிவித்தார்.
தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், “மறைந்த மாபெரும் ஞானி திருவள்ளுவர் படத்திற்கு மீண்டும் காவி சாயம் பூச முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த ஆளுநரை விட, தற்போதைய ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் மோசமாகவும், தமிழகத்தின் இறையாண்மைக்கு எதிராகவும் அமைந்துள்ளன. இவரது இந்தத் தன்னிச்சையான போக்குகளைக் கண்டித்து, தமிழகத்தில் எந்தப் பகுதிக்கு இந்த ஆளுநர் அரசு முறைப் பயணமாக வந்தாலும், மதிமுக சார்பில் அவருக்குக் கடுமையான முறையில் கருப்புக்கொடி காட்டப்படும்” என்று எச்சரித்தார்.
சமீபகாலமாக அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட போது, “பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைது செய்யப்பட்டு, மிக எளிதாகப் பிணையில் (ஜாமீன்) வெளியே வரும் நபர்கள் தான், சமூகத்தில் மேலும் கூடுதலாகப் பாலியல் தொடர்பான கொடூரமான குற்றங்களைச் செய்கின்றனர். எனவே, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு எக்காரணம் கொண்டும் ஜாமீன் வழங்கக் கூடாது. அவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழியும் வகையில் சட்டங்களை இரு அரசுகளும் உடனடியாகத் திருத்த வேண்டும்” என்று மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்குத் தார்மீக வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தற்போதும் நீடித்து வருகிறது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலின் போது கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தைக் கூட்டி, உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.
தமிழகத்தில் அமைந்துள்ளன புதிய தவெக ஆட்சி குறித்துக் கேட்டபோது, “முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அதிகாரத்திற்கு இவர்கள் முற்றிலும் புதியவர்கள். எனவே, இவர்களது செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க இப்போதைக்குக் குறைந்தது ஆறு மாத கால அவகாசமாவது வழங்க வேண்டும், அதற்குப் பிறகே இவர்களின் ஆட்சியைப் பற்றி நாம் விமர்சிக்க முடியும்” என்றார்.
செய்தியாளர் சந்திப்பின் நிறைவாகப் பேசிய வைகோ, “தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்புகளைத் தவிர்த்து வருவது ஜனநாயத்திற்கு நல்லதல்ல. அவர் உடனடியாகப் பத்திரிகையாளர்களை நேரில் சந்திக்க வேண்டும். அப்போதுதான் நாட்டு நடப்புகளும், மக்களின் நிஜமானப் பிரச்சினைகளும் அவருக்கு முழுமையாகத் தெரியவரும்” என்று அட்வைஸ் தந்தார். மேலும், நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி கூட கடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது இல்லை என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் வைகோ வேதனையுடன் தெரிவித்து முடித்தார்.
