Home செங்கல்பட்டு மறைமலை நகர் சிப்காட்: தெருவிளக்குகள் பழுது: அச்சத்தில் தொழிலாளர்கள்

மறைமலை நகர் சிப்காட்: தெருவிளக்குகள் பழுது: அச்சத்தில் தொழிலாளர்கள்

0

மறைமலை நகர் சிப்காட் பகுதியில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாததால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் இரவு நேர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Maraimalai Nagar சிப்காட் தொழிற்பேட்டையில் 250-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 2,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிக்காக வந்து செல்கின்றனர்.

இந்த பகுதிகளில் மறைமலை நகர் நகராட்சி சார்பில் தெருவிளக்குகள் மற்றும் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் பல கடந்த 3 மாதங்களாக பழுதடைந்து எரியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சிப்காட் செல்லும் காமராஜர் சாலை, முத்துராமலிங்கத் தேவர் சாலை, காட்டாங்குளத்தூர் மற்றும் கீழக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சத்துடன் பயணம் செய்து வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த வாரம் கூடலூர் ஏரிக்கரை பகுதியில் தெருவிளக்குகள் எரியாததால் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மறைமலை நகர் நகராட்சி எல்லைக்குள் மொத்தம் 9,210 மின் விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த விளக்குகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் விளக்குகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version