மறைமலைநகர் சிப்காட் பகுதியில் வெளியேறும் கழிவுநீர்: நோய்த்தொற்று பரவும் அபாயம்!

0
2

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சிப்காட் (SIPCOT) தொழிற்சாலை வளாகப் பகுதியில், கழிவுநீர் திறந்தவெளியில் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் கடும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

மறைமலைநகர் சிப்காட் பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்தத் தொழிற்சாலைகளில் மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாள்தோறும் பணிபுரிந்து வருகின்றனர்.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாகச் சுத்திகரிக்கப்படாமல் திறந்தவெளியில் விடப்படுவதால், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.

தொழிற்சாலைக் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சில தனியார் டேங்கர் லாரிகள் விதிமீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பொதுவாகத் தொழிற்சாலைக் கழிவுநீர் டேங்கர் லாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு, கழிவுநீர் வடிகால்வாய்களில் விடப்பட வேண்டும். ஆனால், ஒருசில லாரிகள் கழிவுநீரைத் திறந்தவெளியிலேயே கொட்டிச் செல்வதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஜி.எஸ்.டி. (GST) சாலையை ஒட்டியுள்ள காலி இடங்கள் மற்றும் பொதுப் பகுதிகளில் இந்தக் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்தச் சட்டவிரோதச் செயலால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், அப்பகுதியில் மர்மக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்தி, கழிவுநீரைத் திறந்தவெளியில் கொட்டும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழிலாளர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.