மாமல்லபுரம் பகுதியில் விடுமுறை நாட்களில் அதிகரிக்கும் சுற்றுலா வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கடற்கரை நகரம், பல்லவர் காலக் கலைச்சிற்பங்கள் மற்றும் இயற்கை அழகால் நாடு முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. குறிப்பாக வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார், இருசக்கர வாகனங்களில் இங்கு வருகை தருகின்றனர்.
இதனால், கடற்கரை சாலை, ஐந்து ரதங்கள் சாலை, கிழக்கு ராஜவீதி, தென்மாட வீதி, கோவளம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் நெரிசலில் சிக்கி, போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பாக அமைக்கப்பட்ட கடைகள் மற்றும் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவது இந்த பிரச்சினையை மேலும் மோசமாக்கியுள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் பூங்கா மற்றும் முக்கிய இடங்களின் அருகில் வாகனங்களை கட்டுப்பாடின்றி நிறுத்துவதும் நெரிசலை அதிகரிக்கிறது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், நிலையான தீர்வு எட்டப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
நெடுஞ்சாலைத் துறையினர் அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதாக கூறினாலும், மீண்டும் மீண்டும் கடைகள் உருவாகும் நிலை தொடர்கிறது. கோடை விடுமுறை காலத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறையும், நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
