மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ள சோழிப் பொய்கை குளம் தற்போது பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் இருப்பதாக பொதுமக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள இந்த குளம் சுமார் 11.48 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்நிலை, ஆழ்வார்கள் காலத்தில் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக இருந்தது.
மாமல்லபுரத்தின் கிழக்கில் கடலும், மேற்கில் பக்கிங்காம் கால்வாயும் இருப்பதால், சில இடங்களில் உப்பு நீர் கலப்பு ஏற்பட்டாலும், இந்த குளத்தின் ஊற்றுநீர் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி சுகாதாரமான குடிநீரை வழங்க உதவியது. ஆனால், நகராட்சி நிர்வாகத்தின் புறக்கணிப்பால் குளம் மாசடைந்து, பாழடைந்து காணப்பட்டது.
இதனை சீரமைக்க 2018-2019ஆம் ஆண்டுகளில் பொதுமக்கள் சார்பில் சுமார் ₹47 லட்சம் நிதி திரட்டி குளம் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. மேலும், 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலமும் மீட்கப்பட்டது. தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியை முன்னிட்டு, குளத்தை அழகுபடுத்த ₹95 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், தரமற்ற பணிகள் மற்றும் பராமரிப்பு இல்லாததால் தற்போது மரக்கன்றுகள் வாடி அழிந்துள்ளதுடன், குளத்தைச் சுற்றி கோரை புற்கள் அதிகமாக வளர்ந்து குளம் மீண்டும் பாழடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை பராமரிக்க வேண்டிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், குளத்தை மீண்டும் தூர்வாரி சீரமைத்து, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் படகு சவாரி ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
