செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நெல்லி கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நெல்லி கிராமத்தை சேர்ந்த எத்திராஜ் மற்றும் ராஜ் ஆகியோர் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இருவருக்கும் சொந்தமான ஆடுகளை வீட்டுக்கு அருகே இருந்த ஆட்டுபட்டியில் கட்டி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில், இன்று காலை இந்த ஆட்டுப் பட்டிக்குள் புகுந்த இரண்டு வெறிநாய்கள், அங்கிருந்த ஆடுகளை கடித்துக் குதறியுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. மேலும், 24 ஆடுகள் நாய்க்கடி பட்டு உயிருக்குப் போராடி வருகின்றன.
ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததால் தங்களுக்கு சுமார் ரெண்டரை லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறும் இருவரும், அரசு தங்களுக்கு உரிய நிதி உதவி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர். இதனிடையே வெறிநாய்களை ஒழிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
