தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை வரவேற்று, இது மக்களின் ஒற்றுமையின் வெற்றியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த மசோதா தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியாக இருந்ததாகவும், அதை முறியடித்ததில் அனைத்து எதிர்க்கட்சிகளும் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் கூறினார்.
ஒரு வருடத்திற்கு முன்பே இந்த ஆபத்தை உணர்ந்து, மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடத்தி போராட்டங்களைத் தொடங்கியதாக ஸ்டாலின் விளக்கினார். கருப்புக் கொடி போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த மசோதாவுக்கு எதிரான எதிர்ப்பு நாடு முழுவதும் பரவியது என அவர் குறிப்பிட்டார்.
பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், உண்மையில் இது அரசியல் நன்மைக்காக உருவாக்கப்பட்ட திட்டம் என விமர்சித்தார். இதனை தோற்கடிக்க பெண்களே முன்னிலை வகித்தது பெருமைக்குரியது என்றும் அவர் பாராட்டினார்.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், ராகுல்காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பல மாநில தலைவர்களும் இந்த போராட்டத்தில் பங்கு கொண்டதாகவும் கூறினார்.
இது ஒரு தொடக்கம் மட்டுமே என வலியுறுத்திய அவர், எதிர்காலத்தில் இத்தகைய முயற்சிகளை முறியடிக்க தொடர்ந்து போராடுவோம் என்றார். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகக்கு மக்கள் கடும் பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
