Home செங்கல்பட்டு மனைவியைக் கொலை செய்து கணவன் தற்கொலை! 3 வயதுக் குழந்தை உயிருடன் மீட்பு!

மனைவியைக் கொலை செய்து கணவன் தற்கொலை! 3 வயதுக் குழந்தை உயிருடன் மீட்பு!

0

கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டமெட்டரை கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தம்பதியின் 3 வயதுப் பெண் குழந்தை, சடலங்களுக்கு இடையே அழுதுகொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது அப்பகுதி மக்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டமெட்டரை கிராமத்தில் சுரேஷ் (30) என்பவர் தனது மனைவி காவியா மற்றும் 3 வயது மகள் வைஷ்ணவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சுரேஷ் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்திலும், காவியா டாடா நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். நேற்று வியாழக்கிழமை காலை வெகுநேரமாகியும் இவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

வீட்டிற்குள் இருந்து குழந்தை வைஷ்ணவியின் அழுகுரல் நீண்ட நேரமாகத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உத்தனப்பள்ளி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுரேஷ் மின்விசிறி கொக்கியில் தூக்கில் தொங்கிய நிலையிலும், காவியா கழுத்தில் கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தம்பதியினரிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ், சமையலறை கத்தியால் காவியாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் காவியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் செய்த குற்ற உணர்ச்சியில், பாத்திரங்களை அடுக்கி வைத்து அதன் மீது ஏறிச் சுரேஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

பெற்றோர் இருவரும் சடலமாகக் கிடந்ததை அறியாத 3 வயதுக் குழந்தை, பசியாலும் பயத்தாலும் அழுதுகொண்டே இருந்துள்ளது. உயிரிழந்த தம்பதியினருக்குக் குழந்தை இருப்பதைக்கூட எண்ணிப் பார்க்காமல் ஆத்திரத்தில் எடுத்த இந்த விபரீத முடிவு, ஒரு பிஞ்சுக் குழந்தையின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version