கோட்டைக்காடு கழுவெளியில் முதலை – மீனவர்கள் பீதி

0
2

செய்யூர் அடுத்த கோட்டைக்காடு பகுதியில் உள்ள கழுவெளியில் முதலை நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டதால், அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது.

இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள கழுவெளி பகுதியில், செங்கல்பட்டு மாவட்டத்தின் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் ஓங்கூர் ஆறு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளின் நீர் சேர்கிறது. பின்னர் அந்த நீர் ஆலம்பரைக்குப்பம் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.

இந்த கழுவெளி பகுதியைச் சேர்ந்த பலர் மீன், இறால் மற்றும் நண்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மே 10ஆம் தேதி காலை மீனவர்கள் வழக்கம்போல் வலை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சுமார் 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று வலையில் சிக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த முதலை தப்பித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, மீனவர்கள் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், நேற்று மதியம் கோட்டைக்காடு பகுதியில் உள்ள மயானம் அருகே முதலை படுத்திருந்ததை மக்கள் கண்டதாக கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டத்தை உணர்ந்ததும் முதலை மீண்டும் கழுவெளி பகுதிக்குள் சென்றதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கழுவெளி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் முதலை கண்களில் தென்படாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

முதலை நடமாட்டம் காரணமாக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு முதலை பாதுகாப்பாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.