காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற காளான் வளர்ப்பு பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
காளான் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகரித்து வரும் சூழலில், அதை வளர்த்து வருமானம் ஈட்டுவதற்கு விவசாயிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர். அதனடிப்படையில், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண் அறிவியல் மையத் தலைவர் சித்தார்த் தலைமை வகித்தார். இந்த பயிற்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட பருவ நிலைக்கு, சிப்பி காளான் நன்கு வளரும் என்பதால், குடில் அமைத்து, அதில் வைக்கோல் வைத்து மெத்தை போன்ற அமைப்பில் காளான்களை வளர்க்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
தயார் செய்யப்படும் காளான்களை அப்படியே விற்பனை செய்யாமல், காளான் ஊறுகாய், பிரியாணி, பொடி, சூப் என மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மேம்படுத்தி விற்றால் நல்ல வருவாய் கிடைக்கும் என்று பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள காளான் பண்ணையை பார்வையிட்டனர்.
