முறையற்ற பணிநீக்கம் மற்றும் ஊதிய நிலுவைத் தொகை வழங்காத விவகாரத்தில், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வழக்கறிஞர்களுடன் வருகை தந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டர்களாகப் பணியாற்றி வந்த சந்திரசேகர் (53) மற்றும் பாலாஜி (40) ஆகியோருக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாதது மற்றும் அநியாயமாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தற்போது நீதிமன்ற ஜப்தி நடவடிக்கை வரை சென்றுள்ளது.
கடந்த 2011 முதல் 2021 வரை பம்ப் ஆபரேட்டர்களாகப் பணியாற்றி வந்த இவர்களுக்கு, கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அரசு நிர்ணயித்த ரூ. 9,000 சம்பளத்தை வழங்காமல், வெறும் ரூ. 4,000 மட்டுமே வழங்கி ஊதியச் சுரண்டலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து வழக்கறிஞர் வெங்கடேசன் மூலம் காஞ்சிபுரம் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் 2023-ல் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2025-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இருவருக்கும் மீண்டும் பணி வழங்கவும், இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் உத்தரவிட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலகம்: இருவருக்கும் தலா ரூ. 4,86,000 இழப்பீடு வழங்க வேண்டும். ஆலப்பாக்கம் ஊராட்சி: தலா ரூ. 21,000 வழங்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பணி வழங்காமலும், இழப்பீடு தராமலும் இழுத்தடித்த நிலையில், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இதனை நிறைவேற்ற இன்று நீதிமன்ற ஊழியர்கள் வழக்கறிஞர்களுடன் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
ஜப்தி நடவடிக்கையைத் தடுக்க அதிகாரிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில், இழப்பீடு வழங்க 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் எனக் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் கோரிக்கை வைத்தது. இதனை ஏற்று நீதிமன்ற ஊழியர்கள் தற்காலிகமாகத் திரும்பிச் சென்றனர்.
அரசு நிர்வாகமே நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சாமானியத் தொழிலாளர்களை அலைக்கழிப்பது வேதனையளிப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். 10 நாட்கள் கெடுவுக்குள் அரசு தனது நிலுவைத் தொகையை வழங்குமா அல்லது ஜப்தி நடவடிக்கை தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





