“மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான புதிய திட்ட அறிக்கை (DPR) மத்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இனி இத்திட்டம் குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டியது மத்திய ஜல் சக்தி அமைச்சகமும், மத்திய நீர் வள ஆணையமும் (CWC) தான்” என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் டெல்லியில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் சமன்பாட்டு நீர்த்தேக்கம் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு தெரிவித்து வந்த கடுமையான ஆட்சேபனைகளை “முன்கூட்டியே தொடரப்பட்ட வழக்கு” எனக் கூறி அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, கர்நாடக மின் கழக நிறுவனத்தின் புதிய பொறுப்புகளையும் கவனித்து வரும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாது திட்டத்திற்கான அடுத்தகட்ட உத்திகளை அசுர வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தொழில்நுட்பக் குழு மற்றும் கர்நாடக பொறியியல் ஆராய்ச்சி நிலையத்தின் (KERS) வழிகாட்டுதலோடு திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். “இனி இந்த விவகாரத்தில் பந்து மத்திய அரசின் கோர்ட்டில் தான் உள்ளது. மத்திய நீர் வள ஆணையம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் (CWMA) இறுதி ஒப்புதல்கள் கிடைத்த அடுத்த விநாடியே, அணை கட்டுவதற்கான பூமி பூஜை போர்க்கால அடிப்படையில் நடத்தப்படும்” என்று அவர் திட்டவட்டமாகப் பிரகடனம் செய்தார். கர்நாடகாவின் இந்தத் திடீர் மூவ், தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில் எல்லையோர மாவட்ட விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, இரு மாநிலங்களுக்கு இடையேயான காவிரிப் போரை மீண்டும் உச்சக்கட்ட அரசியல் விறுவிறுப்பிற்கு இட்டுச் சென்றுள்ளது.





