செய்யாறு அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த சீம்பலம் அருகே 15 வயது சிறுமி 8 மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. கஞ்சா போதையை கட்டவிழ்த்து விட்டு, ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாளில் கூட பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க துப்பில்லாத அரசாக திமுக திகழ்வது கண்டிக்கத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த கல்பட்டு கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பணம் வாங்கிக் கொண்டு நேற்றிரவு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது சீம்பலம் என்ற இடத்தில் 8 மனித மிருகங்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்தக் கொடிய நிகழ்வில் படுகாயமடைந்த சிறுமி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சிறுமியை சீரழித்த மனித மிருகங்கள் அனைவரும் கடுமையான கஞ்சா போதையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பால்மணம் மாறாத சிறுமியை 8 மிருகங்கள் வேட்டையாடினால் அதை அந்தக் குழந்தையால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்? அந்தக் குழந்தை எவ்வளவு நரகத்தை அனுபவித்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. இந்தக் கொடுமைக்கும் தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய கையாலாகாத தி.மு.க. அரசு தான் காரணம் ஆகும்.
தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நரகமாகி விட்டது என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டு தான் இந்த கொடிய நிகழ்வு ஆகும். அண்மைக்காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்து விட்டன.சில வாரங்களுக்கு முன்பு தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஓபகவலசை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்த கண்ணப்பன் என்ற 74 வயது முதியவரை கொலை செய்த கும்பல், அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. அதே கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தையை திமுகவின் இளைஞரணி நிர்வாகி ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தான். அதைத் தொடர்ந்து கசென்னையை அடுத்த மதுராந்தகம் அருகில் 14 வயது சிறுமியை இரு மனித மிருகங்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளன. அதனால் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் கொஞ்சமும் விலகாத நிலையில், அதற்கு அடுத்த நாளே விளாத்திக்குளத்தில் அடுத்த 12&ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேற்றப்பட்டது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்டக் கொடுமையும், திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டக் கொடுமையும், திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் கிராமம் அருகே ஆந்திராவிலிருந்து வந்த இளம்பெண்ணை அவரது தாயின் கண் எதிரிலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமும் நமது மனதிலிருந்து மறையாத நிலையில் அடுத்தடுத்து கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அத்தனைக்கும் காரணம் துப்பில்லாத திமுக அரசு தான்.
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் கொடுமைகளும் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின்படியான குற்றங்களின் எண்ணிக்கை 34,612 ஆகும். போக்சோ சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 27,877 ஆகும். ஒட்டுமொத்தமாக ஐந்தாண்டுகளில் குழந்தைகளுக்கு எதிராக மொத்தம் 62,489 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. போக்சோ சட்டத்தின்கீழ் பதிவான வழக்குளின் எண்ணிக்கை திமுக ஆட்சியில் 129% அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்களின் எண்ணிக்கை 44,418 ஆக உயர்ந்திருக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படாதது தான். அதேபோல், காவல்துறை செயலிழந்தது, பாலியல் குற்றங்களைச் செய்தவர்களுக்கு விரைவாக தண்டனை வழங்கப்படாதது போன்றவையும் இதற்குக் காரணம் . தமிழ்நாட்டில் திமுக அரசு தொடரும் பட்சத்தில் இந்தக் கொடுமைகள் நிற்கவே நிற்காது; இன்னும் அதிகமாகத் தொடரும்.
பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் வணிகம் ஒழிக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப் படுவதுடன், மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள், போக்சோ சிறப்பு நீதிமன்றங்களும் போதிய எண்ணிக்கையில் திறக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்கப்படும். இதன் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும்; பாதுகாப்பு வழங்கப்படும்.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத திமுக அரசு இன்னும் இரு நாள்களில் தொலைய வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எட்டு மனித மிருகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தவாதம் அளிக்கிறேன் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
