ஓமன் அருகே இந்தியக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: 14 மாலுமிகள் பத்திர மீட்பு!

0
2

ஓமன் நாட்டின் கடற்கரை அருகே இந்தியக் கொடி ஏந்திய சரக்கு கப்பல் ஒன்றின் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது. இதில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் ஓமன் நாட்டு கடலோரக் காவல் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ‘ஹாஜி அலி’ (Haji Ali) என்ற சரக்கு கப்பல், சோமாலியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நோக்கி கால்நடைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை ஓமன் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள லிமா (Limah) கடற்கரை அருகே சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்மப் பொருள் கப்பலைத் தாக்கியது. இது ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் உடனடியாகத் தீப்பற்றியது. நிலைத்தன்மையை இழந்த கப்பல் மெல்ல மெல்லக் கடலில் மூழ்கத் தொடங்கியது. அந்தச் சமயத்தில் கப்பலில் ஒரு மாலுமி (Tandel) மற்றும் 13 ஊழியர்கள் என மொத்தம் 14 இந்தியர்கள் இருந்தனர். அவர்கள் உடனடியாக அபாயச் சமிக்கையை (Distress Signal) அனுப்பிவிட்டு, உயிர் காக்கும் படகுகள் மூலம் கப்பலிலிருந்து வெளியேறினர்.

தகவல் அறிந்த ஓமன் கடலோரக் காவல் படையினர், விரைந்து செயல்பட்டு 14 இந்திய மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது ஓமனில் உள்ள திபா (Deeba) துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விடுத்துள்ள அறிக்கையில்:

“ஓமன் கடற்கரை அருகே இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முற்றிலும் ஏற்க முடியாதது. சர்வதேசக் கடல் பகுதியில் வணிகக் கப்பல்களையும், அப்பாவி மாலுமிகளையும் இலக்காக வைத்துத் தொடர்ந்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. மாலுமிகளை மீட்ட ஓமன் அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.