உயர் சம்பள வேலைகள் இருந்தாலும், வேலை-உயிர் சமநிலையின்மை காரணமாக இளைஞர்கள் வேலைவிடுவது அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள ஐஐஐடி (IIIT) பட்டதாரி சிராஜ் மதன் எடுத்த முடிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதான இவர், ஆண்டுக்கு ₹17 லட்சம் சம்பளத்துடன் கிடைத்த வங்கி வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சிராஜ் மதன் பகிர்ந்த தகவலின்படி, ஆரம்பத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருந்த பணிநேரம், பின்னர் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது. வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற நிலை, 6 நாட்களாக மாறியதாகவும் கூறியுள்ளார். அதிக பணிச்சுமை காரணமாக மதிய உணவுக்கான நேரம் கூட 10 முதல் 15 நிமிடங்களுக்கு மட்டுமே குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உடல்நலக் காரணங்களுக்காக விடுப்பு எடுத்தாலும் அதற்கான விளக்கங்களை மீண்டும் மீண்டும் அளிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததாகவும் கூறியுள்ளார். பணியாளர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தமும் இருந்ததாகவும், இலக்குகளை அடைய முடியாவிட்டால் மன அழுத்தம் அதிகரித்ததாகவும் சிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
“பணம் சம்பாதிக்க முடியும், ஆனால் நேரத்தை மீண்டும் வாங்க முடியாது” என்ற அவரது கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படும் அளவுக்கு வேலை செய்வது பயனற்றது என்றும், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உறவுகளை பணத்திற்காக இழக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல இளைஞர்கள் தங்கள் வேலை அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அதிக சம்பளம் கிடைத்தாலும், நிம்மதி இல்லாத வாழ்க்கை தேவையில்லை என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. “நச்சுத்தன்மையான பணியிட கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும்” என்ற கோரிக்கையும் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க இதுவாது பராவியில்லை சம்பளமாவது தருகிறார்கள். ஆனால் இளைஞர்களின் ஏழ்மையை பயன்படுத்திக்கொள்ளும் சில வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் தரகர்கள், வளைகுடா நாடுகளில் ஒரு வேளை சாப்பாடு கூட கொடுக்காமல் ஒட்டகம் மேய்ப்பது போன்ற வேலைகளை பாலைவனத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் செய்ய அனுப்பு வைப்பதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறி வருகின்றனர்.
