செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த இரட்டையர் சகோதரிகளான சஞ்சனா மற்றும் சாதனா ஆகியோர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இருவரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று வெளியிடப்பட்ட பொதுத்தேர்வு முடிவுகளில், அவர்கள் இருவரும் துல்லியமாக 429 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஒரே வீட்டில் வளர்ந்து, ஒரே பள்ளியில் படித்து வந்த இந்த இரட்டையர்கள், தேர்வு முடிவிலும் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது குடும்பத்தினரையும் ஆசிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சஞ்சனா மற்றும் சாதனா இருவரும் தொடர்ந்து இணைந்து படித்து வந்ததாகவும், ஒருவருக்கொருவர் பாடங்களில் உதவி செய்து வந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். தேர்வு முடிவை பார்த்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள், “இரட்டையர்கள் என்றாலும் இவ்வளவு ஒற்றுமை அரிது” என்று வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.
பள்ளி நிர்வாகமும் இரு மாணவிகளின் சாதனையை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது
