தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவி வரும் அரசியல் முட்டுக்கட்டை குறித்து ஆளுநர் மாளிகை இன்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக தலைவர் விஜய் நேற்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், அவருக்கு ஏன் உடனடியாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதற்கான அரசியல் சாசன ரீதியான காரணங்களை ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்கத்தில், ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது குறித்து அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
சட்டப்பேரவையில் யார் ஒருவரால் நிலையான ஆட்சியைத் தர முடியுமென்றும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென்றும் ஆளுநர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது.
ஒரு கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான குறைந்தபட்ச பலம் (தமிழகத்தைப் பொறுத்தவரை 118) இருப்பதை ஆளுநரிடம் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். வெறும் வாய்மொழி உத்தரவாதம் மட்டும் போதாது. ஆளுநரின் இந்த முடிவை அவ்வளவு எளிதில் சட்ட ரீதியாகக் கேள்வி கேட்க முடியாது என்பதையும் அந்த அறிக்கை நினைவூட்டியுள்ளது.
இந்திய அரசியல் சாசனப்பிரிவு 361-ன் படி (Article 361), ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுக்கும் முடிவுகளுக்கு நீதிமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. இது அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையாகும்.
பல்வேறு காலக்கட்டங்களில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர், பெரும்பான்மை பலம் குறித்த சந்தேகம் இருக்கும் பட்சத்தில், ஆளுநர் தீர விசாரித்தே முடிவெடுக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தவெக (108) மற்றும் காங்கிரஸ் (5) ஆதரவுடன் தற்போது 113 இடங்கள் மட்டுமே உள்ளன. மேஜிக் எண்ணான 118-ஐ அடைய இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த 5 உறுப்பினர்களின் கையொப்பமிட்ட ஆதரவு கடிதத்தைத் தவெக சமர்ப்பிக்காததாலேயே, ஆளுநர் விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
ஆளுநரின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, தவெக தரப்பில் இருந்து 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்டும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இடதுசாரிகள் மற்றும் விசிக-வின் முடிவுக்காகக் காத்திருக்கும் விஜய், அந்த ஆதரவு கடிதங்கள் கிடைத்தவுடன் மீண்டும் ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஆளுநரின் இந்த அதிரடி விளக்கம், அரசியல் சாசன விதிகளின்படி ஆட்சி அமைக்கும் நடைமுறையைத் தெளிவுபடுத்தியுள்ளது. தனிப்பெரும் கட்சி என்பதைத் தாண்டி, எண்களின் பலமே ஜனநாயகத்தில் முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.





