அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 11 லட்சம் மோசடி: நாகர்கோவிலில் பரபரப்பு!

0
3

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 11 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த அரசு ஊழியர் தம்பதி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட பெண்மணி இன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (S.P.) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். உள்ளூர் காவல் நிலையத்தில் முறையிட்டும் பலன் இல்லாததால், அவர் எஸ்.பி-யை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மிடலாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெற்றி செல்வி (59). அதே பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களான ராஜ்மோகன் (55) மற்றும் அவரது மனைவி மரிய லீலா (52) ஆகிய இருவரும் வெற்றி செல்வியிடம் அறிமுகமாகியுள்ளனர். அப்போது, வெற்றி செல்வியின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ள இத்தம்பதி, அதற்குப் பிரதிபலனாக 40 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் என்பதால் அவர்களை நம்பிய வெற்றி செல்வி, முதற்கட்டமாக கடந்த 2020 – 2021 காலகட்டத்தில் இரண்டு தவணைகளாக மொத்தம் 11 லட்சம் ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணம் பெற்றுக்கொண்டு பல ஆண்டுகள் கடந்தும் அவர்கள் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. காலம் தாழ்த்தி வந்த அவர்கள், இறுதியில் பணத்தைத் திருப்பித் தரவும் மறுத்து ஏமாற்றி வந்துள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வெற்றி செல்வி, இது குறித்துக் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும், அங்குள்ள போலீசார் முறையான விசாரணை நடத்தவோ அல்லது உரிய நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை என வெற்றி செல்வி வேதனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தனது உறவினர்களுடன் வந்து, மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுத்துப் பணத்தை மீட்டுத் தருமாறு புகார் மனு அளித்தார்.

அரசுப் பணியில் இருந்து கொண்டே பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ள இந்தத் தம்பதி மீதான புகார், குமரி மாவட்ட அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.