அரசு பங்களாக்களை உடனே காலி செய்ய உத்தரவு – முன்னாள் அமைச்சர்களுக்கு PWD அறிவிப்பு

0
1

சென்னையில் உள்ள அரசு பங்களாக்களை விரைந்து காலி செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித் துறை (PWD) உத்தரவு பிறப்பித்துள்ளது. கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள இந்த பங்களாக்கள், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டவை. மொத்தம் 60 பங்களாக்கள் உள்ள நிலையில், அவற்றில் சில காமராஜர் ஆட்சிக் காலத்திலும், மற்றவை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் கட்டப்பட்டவை.

இந்த பங்களாக்கள் 4,000 முதல் 7,000 சதுர அடி பரப்பளவில் விரிவாக அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் டிரைவர்கள், பாதுகாப்பு போலீசார் மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் தங்குவதற்கான தனி வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைச்சர்களாக பணியாற்றிய பலர் இங்கு தங்கியிருந்தனர்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், புதிய அமைச்சர்கள் இந்த பங்களாக்களில் தங்கவுள்ளனர். குறிப்பாக தவெக சார்பில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், முன்னாள் அமைச்சர்கள் விரைவாக பங்களாக்களை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மூலம் முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், வழக்கமாக ஆட்சி காலம் முடிந்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாக்களை காலி செய்வது நடைமுறையாக இருந்தாலும், தற்போதைய சூழலில் புதிய அமைச்சர்களுக்கான தங்குமிடம் அவசரமாக தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில புதிய அமைச்சர்களுக்கு தனிப்பட்ட வசதிகள் குறைவாக உள்ளதால், தற்காலிகமாக சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் துணை முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றால், அரசு பங்களாவில் தொடர்ந்தும் தங்க அனுமதி வழங்கப்படலாம் என்றும், மற்றவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.