வீட்டுக்கு எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் வாங்கும் போது அதன் காலாவதி தேதியை சரிபார்ப்பது மிகவும் அவசியம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களுக்கு இருப்பதைப் போலவே, கேஸ் சிலிண்டர்களுக்கும் பாதுகாப்பு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த காலத்தை கடந்த சிலிண்டர்களைப் பயன்படுத்துவது ஆபத்தானதாக மாறக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
சிலிண்டரின் மேல் பகுதியில் A, B, C, D என்ற எழுத்துகளுடன் ஆண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக “A.26” என்று இருந்தால், அது 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை செல்லுபடியாகும் என்பதை குறிக்கும்.
- A – ஜனவரி, பிப்ரவரி, மார்ச்
- B – ஏப்ரல், மே, ஜூன்
- C – ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்
- D – அக்டோபர், நவம்பர், டிசம்பர்
இதன் மூலம் சிலிண்டர் எந்த காலாண்டு வரை பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்பதை அறிய முடியும். காலாவதி முடிந்த சிலிண்டர்கள் விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுமக்கள் சிலிண்டர் பெறும் போது அதன் தேதியை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காலாவதியான அல்லது சேதமடைந்த சிலிண்டர்கள் வழங்கப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்திற்கோ அல்லது 1800-2333-555 என்ற புகார் எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
வீட்டு பாதுகாப்பை உறுதி செய்ய சிறிய விழிப்புணர்வே பெரிய விபத்துகளை தவிர்க்க உதவும் என்பதால், இந்த தகவலை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





